English Version
அழைப்பின் குரல் கேட்டேன்
“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்
நீ
கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி,
உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரியாகக் கட்டளையிட்டேன்”
(எரே. 1 :
5)
பிறப்பும் அறிமுகமும்
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் செல்வ செழிப்பான சிவகாசி
பட்டிணத்தில் 1960-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ம்
தேதி பக்தியுள்ள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய
தாத்தா (அப்பாவின் அப்பா) திரு.ஜெபமணி அவர்கள் ஆசிரியராகப்
பணியாற்றிக்கொண்டே ராக்லாண்டு நினைவு ஆலயத்தைக் கட்டி எழுப்பவும்,
ஆலய ஊழியக் காரியங்களில் முன்னோழயாகவும் நின்றவர்கள். என்
தகப்பனார் திரு.வேதமணி அவர்கள் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றியும்,
ஆலய காரியங்களிலும், குறிப்பாக பாடகர் குழு அமைத்து தேவனை
மகிமைப்படுத்தியும் வந்தார்கள். என் தாய் வழியில் தாத்தா, பாட்டி,
திரு.ஜோசப், திருமதி. அமுதா அவர்கள் இந்திய மிஷனெரி சங்கத்தில் (I.M.S)
பளியர்கள் மத்தியில் பணியாற்றிய நற்செய்தி தொண்டர் மோசஸ் முத்துமாலை
அவர்களைத் தொடர்ந்து பணியாற்றிய திருத்தொண்டர். என் தாயார் திருமதி.
ஜாய் அவர்கள் தேவனுக்குப் பயந்து நடந்த ஆவிக்குரிய தாயார் மட்மன்றி,
தயாள குணத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த சாட்சிக்குரியவர்கள்.
இளமைப்பருவம்
நான் நல்ல
குடும்பப் பின்னணியில் பிறந்தாலும் நான் பிறந்து 40 நாட்களில் என்
தாயாரை தேவன் எடுத்துக் கொண்டார். அருமைத் தாயின் அன்பு முகம் கூட
அறியாத துர்ப்பாக்கியசாலியான நான் சிற்றன்னையின் வளர்ப்பில்
வளர்ந்தேன். பிராயத்தில் பலவிதமான உலக மாயைகளில் சிக்கி தேவனை
விட்டு தூரமானதால் என் தகப்பனாரும் என்னை வெறுத்து, 1975-ம் ஆண்டு
செப்டம்பர் மாதம் என்னுடைய 16-ம் வயதில் என்னை வீட்டை விட்டே
வெளியேற்றிவிட்டார்கள். நன்கு படிக்க வாஞ்சையாய் இருந்த என்
கல்லூரி படிப்பும் நின்று விட்டது. என்னைக் குறித்து
பரிதபித்தவர்கள் அநேகர். ஆனால் நேசித்து பராமரிப்போர் யாருமின்றி
மனம்போன போக்கில் அலைந்து திரிந்து கூலி வேலைகளைச் செய்து என்
வயிற்றை நிரப்பினேன்.
மாயையான வாழ்வு
இறுதியில் என்
மூத்த சகோதரனுடைய உதவியால் கோவையில் மொத்த வியாபாரம் செய்யும்
கடையொன்றில் வேலைசெய்யும்படி பணியாளராக அமர்த்தப்பட்டேன். ஆரம்ப
நாட்களில் கடினமான வேலையாய் இருந்தாலும் மனதில் பொறுமையுடன்
உண்மையாகப் பணியாற்றினேன். படிப்படியாக முன்னேறினேன். கைகளில்
பணம் கிடைத்தது. சிற்றின்ப கேளிக்கைப் படங்கள் என் வாழ்வில் மன
சாமானத்தையும் நான் தேடும் அன்பையும் தரவில்லை. என்னைச் சுற்றி
இருந்தவர்கள் என்னுடைய பணத்திற்காகவும் என் உண்மை உழைப்பிற்காகவும்
நேசித்தார்களே தவிர உண்மையான அன்பைக் காட்டவில்லை. நான்
தங்கியிருந்த வீட்டின் மாடியில் சென்று வானத்தைப் பார்த்து “அம்மா-
அம்மா” என்று கண்ணீர்விட்டு அழுதேன். பாசமுள்ள குடும்பங்களைப்
பார்க்கும்போது இப்படிப்பட்ட சிலாக்கியங்கள் எனக்கு இல்லையே என்று
ஏக்கமுற்றேன். உலக வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு செய்து ஒரு
பாட்டில் விஷத்தை எடுத்துக் குடித்து உயிரை மாய்த்துக்கொள்ள
பிரயாசப்பட்டேன். அதுவும் பயனற்றுப் போய்விட்டது. நான் வேலை
பார்த்த ஸ்தலத்திலும் என்னை வெறுக்க ஆரம்பித்தார்கள்.
கிறிஸ்துவில் புதுவாழ்வு
மறுபடியும்
கோவைப் பட்டிணத்தில் செய்வதறியாது அலைந்து கொண்டிருந்த வேளையில்
பாக்கியம் அம்மாள் அவர்கள் எனக்கு அறிவுரைகள் சொல்லி, அவர்கள் மகன்
மோசஸ் சாம்சன் அவர்களிடம் பரிந்து பேசி அவர்கள் தொழிலைக்
கவனிக்கும்படி வைத்தார்கள். என் மனதில் இன்னும் தேவ சமாதானம்
இல்லை. ஞாயிற்றுக் கிழமைதோறும் போதகர். ஜோயல் ஆனந்தராஜ் அவர்கள்
வீட்டிற்கு ஜெப ஆராதனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
ஆராதனை நடந்து
கொண்டிருக்கும் வேளையில் அனைவரையும் வேடிக்கையாகப் பார்ப்பேன்.
கிட்டத்தட்ட அனைவருமே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்.
பேராசிரியர்கள், மற்றும் உயர்நிலையில் இருப்பவர்கள். நான் ஒரு
மூலையில் அமர்ந்துகொண்டு இருக்கும் வேளையில் ஒரு தேவனுடைய பிரசங்க
வார்த்தை எனக்கு நேராக வந்தது. உலகத்தார் அன்பை விட கல்வாரி
அன்புதான் மிகப்பெரியது. என்ற வார்ததையின் மூலம் தேவன் என்னுடன்
இடைபட்டார். கண்ணீருடன் கல்வாரி அன்பிற்காக ஜெபித்தபோது கல்வாரிக்
காட்சியின் மூலம் கல்வாரி அன்பினால் என்னை நிரப்பினார். என்
சரீரத்திலுள்ள பலவீனங்களை நீக்கி சுகத்தையும் தேவன் தந்தார்.
ஆராதனை வேளையில் (அனைவரும் துதித்துக் கொண்டிருக்கும்போது)
தீர்க்கதரிசனமாக தேவதாஸ்! யார் அந்த தேவதாஸ்? என்ற சத்தம்
கேட்டது. நான் வேறு யாராவது நல்ல தேவதாஸ் இருப்பார்கள் என்று
நினைத்தேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் என் மேல் அளவில்லாமல்
ஊற்றப்பட்டார். என்னுடைய கடந்தகால வாழக்கையின் வீழ்ச்சியையும்,
வருங்காலத்தில் எனக்கு தேவன் தரும் (தற்போது நடக்கும் ஊழியப்பாதை)
தேவ திட்டத்தையும் தீர்க்கதரிசனமாக தேவன் உரைத்தார். “ஒரு ஜாதி
மக்களை உனக்குத் தருவேன். பவுலைப்போல அப்போஸ்தல ஊழியத்தை உனக்குக்
கொடுப்பேன்” என்று தேவன் வாக்குரைத்தார்.
ஊழிய அழைப்பின் உறுதிப்பாடு
போதகர் ஜோயல்
ஆனந்தராஜ் அவர்கள் சபையில் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து
வந்தேன். ஊழிய அழைப்பை சந்திக்க நேரமில்லாமல் பிற்காலத்தில்
செய்துகொள்ளலாம் என்று நினைத்து கை நிறைய பணம் சம்பாதித்து
ஊழியத்திற்குக் கொடுக்கலாம் என்று தீர்மானித்தேன். 2 வருடங்கள்
கடந்து சென்றன. புதிதாய் நான் ஆரம்பித்த தொழில் காரியமாய் அலைந்து
கொண்டிருந்தபோது 1981 அக்டோபர் மாதத்தில் மூலமாய் FMPB மூலமாய்
நடத்தப்பட்ட கிதியோனியர் முகாமில் மறுபடியும் ஆண்டவர் என்னை
சந்தித்தார். அந்த முகாமில் என்னுடைய சொந்த பட்டணமாகிய
சிவகாசியில் 130 வருடங்களுக்கு முன்பாக இங்கிலாந்து
தேசத்திலிருந்து வந்த ராக்லாண்டு துரை ஐயா அவர்கள் சுவிசேஷத்தைக்
கூறி அறிவித்த சம்பவங்களைக் கூறினார்கள். தொப்பியில் கூழ் வாங்கி
குடித்து, பல கஷ்டங்களையும் அனுபவித்தார். அவர் சுவிசேஷம்
கூறும்போது சாணியையும், கற்களையும், அழுகிய பழங்களையும் அவர் மீது
எறிந்தார்கள். அப்பொழுது அவர் “எல்லாவற்றையும் எறிந்துகொள், நான்
சொல்வதையும் ஏற்றுக்கொள்” என்று மூதாதையாருக்கு சுவிசேஷம்
கூறினார். ஓரிடத்தில் இரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.
இறுதியில் சிவகாசி மண்ணில் இரத்த சாட்சியாக மரித்தார் என்று
சரித்திரம் கூறுகிறது. இன்று பல ஆயிரம் விசுவாசிகளுக்கு அநேக
ஆலயங்கள் இருந்தாலும் அதில் மிகப்பெரிய ஆலயமான C.S.I ராக்லெண்டு
நினைவாலயம் உண்டு என்று கூறக்கேட்டேன். இதன் மூலம் ஆண்டவர்
என்னோடு பேசினார். ராக்லெண்ட் கோதுமை மணியாய் மறைந்து கோதுமை
மணியாய் உன்னை உருவாக்கினார். நீ கோதுமை மணியாய் உன்னை
ஒப்புக்கொடுப்பாயா? 90 கோடி மக்கள் வாழும் இந்த பாரத தேசத்திற்கு
வெளிநாட்டு மிஷனெரிகள் வர முடியாது. நீதான் ராக்லெண்ட் என்று
பேசினார். சந்தியா வேளையில் “என்னை நேசிக்கிறாயா? என் ஆடுகளை
மேய்ப்பாயாக“ என்று எனக்கு உரைத்த தீர்க்கதரிசன வார்த்தைகளை
உறுதிப்படுத்தினார். மிஷனெரி ஊழியத்திற்குக் கீழ்ப்படிந்த என்னை
தேவன் FMPB மூலமாக 1981 முதல் 1985 வரை வேதாகமப் பயிற்சி
பெறவைத்து வட இந்தியாவில் உத்திரபிரதேசம், பீகார் மாநிலங்களில்
பயன்படுத்தினார்.
இல்லற வாழ்வின் ஆசீர்வாதம்
1985-ம்
வருடம் ஜுலை 8-ம் தேதி என்னை நேசிக்கவும், என்னோடு இணைந்து ஊழியம்
செய்யவும் ஏற்ற துணையான IMS-ல் ஒரிசாவில் பணியாற்றிக் கொண்டிருந்த
மிஷனெரியான வஹிதா அவர்களை தேவன் எனக்கு வாழ்க்கைத் துணையாகக்
கொடுத்தார். திருமணமாகி சில தினங்களில் ஜெபித்துக்
கொண்டிருக்கும்போது கைகளில் வில், அம்பு வைத்துக்கொண்டு மலைகளில்
ஓடும் மக்கள் மத்தியில் நாங்கள் சுவிசெஷத்தைப் பிரசங்கிக்கும்
தரிசனத்தை ஆண்டவர் காட்டினார். மேலும் கோவைப் பட்டிணத்தில்
14.07.1985-ல் நடைபெற்ற திருமண வைபவத்தில் மறுபடியும்
தீர்க்கதரிசனமாக “ஒரு ஜாதி மக்களை உங்களுக்குத் தந்து
ஆசீர்வதிப்பேன்” என்று நாங்கள் கண்ட தரிசனத்தின் மக்களையும்
உறுதிப்படுத்தி எங்களை ஆசீர்வதித்தார். ஒவ்வொரு மனிதனுடைய
வெற்றிக்குப் பின்புறம் மனைவி இருப்பாள் என்பது உலக மொழி. அதன்படி
குடும்ப காரியங்களைப் பராமரிக்கவும் வருவோருக்காக ஜெபித்து
ஆலோசனைகளை வழங்குவதிலும், ஊழியப் பொறுப்புகளில் பங்கு வகிக்கவும்
தேவன் சகல கிருபைகளையும் அவளுக்குக் கொடுத்து, மூன்று
பிள்ளைகளையும் தந்து குடும்பத்தை ஆசீர்வதித்தபடியால் தேவனைத்
துதிக்கிறேன்.
IMS மூலமாக நற்செய்திப் பணி.
தேவன்
தரிசனத்தில் காட்டிய அதே பீல் மக்கள் மத்தியிலே மிஷனெரியாகச்
சென்று பணித்தளத்தையும் மக்கள் கூட்டத்தையும் ஆய்வு செய்து
ஊழியத்தை ஆரம்பிக்க ஆயத்தமா என்று கேட்டார். தேவனுடைய
அழைப்பையும், தரிசனத்தையும் உறுதிப்படுத்தி 5 வருடங்கள் குஜராத்
துதியா என்ற பணித்தளத்தை கிறிஸ்தவர்களே அல்லாத லிம்கேடா தாலுகாவைக்
கண்டுபிடித்து நான்கு ஆலயங்களையும், 5 சுதேச ஊழியர்களையும் சுமார்
1000 ஆத்துமாக்களையும் தேவனண்டை வழிநடத்தவும் கிருபை செய்தார்.
அவருக்கே மகிமை உண்டாவதாக
தேவனுடைய தீர்மானத்தை நிறைவேற்றும் ஊழிய அழைப்பு
1991-ம் ஆண்டு
ஜுலை மாதம் 1 கோடி பீல் மக்களை தேவனண்டை நடத்துவதற்கான Sharing
Love Misson –ஷாலோம் மிஷனெரி ஊழியத் திட்டத்தையும், நடத்துதலையும்
தேவன் எங்களுக்குக் கொடுத்தார். நானும் எனது மனைவியும் ஜெபித்து
இதுவரை தேவன் எங்களைக் கொண்டு உருவாக்கின சபைகள், ஊழியர்கள்,
ஆத்துமாக்கள் அனைத்து உடைமைகள் எல்லாவற்றையும் ஒன்றையும்
இச்சிக்காமல் IMS ஸ்தாபனத்தில் ஒப்படைத்துவிட்டோம். சுவிசேஷம்
அறிவிக்கப்படாத வேதனை நிறைந்த அதேர பீல் மக்கள் மத்தியில் அடுத்த
தாலுகாவான ஜாலோத்தை பணித்தளமாக தீர்மானித்து எங்களுக்கு கிடைத்த
பேய்பங்களாவில் ஊழியத்தை ஆரம்பித்தோம். அற்பமான ஆரம்பம் யார்
அசட்டைப் பண்ணக்கூடும்?
பரிசுத்த
ஆவியானவரின் வழிநடத்துதலின்படி அவரையே சார்ந்து கடந்த 19
வருடங்கள் எங்களை பயன்படுத்தி பீ்ல் மக்கள் மத்தியில் 435 சுதேச
ஊழியர்களையும் 520 சபைகளையும் பல்லாயிரம் குடும்பங்களையும் தேவன்
தந்து ஆசீர்வதித்துள்ளார். தொடர்ந்து இனிவரும் காலங்களில் முழு
பீல் மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்து, ஒவ்வொரு கிராமங்களிலும்
சுதேச ஊழியர்களையும், சபைகளையும் உருவாக்குவதற்கும், பீல் ஆதிவாசி
மக்கள் சமுதாயம் கிறிஸ்துவுக்குள் சாட்சியாகவும் தேசத்திற்கு
ஆசீர்வாதமாகவும் அமைய எங்கள் குடும்பத்தை தேவன் பயன்படுத்த
தொடர்ந்து எங்களுக்காக ஜெபிக்கவும் தேவன் தந்த தரிசனப்பணியை
ஜெபித்துத் தாங்கவும் அன்புடன் கேட்கிறோம்.
Top^
|