English Version
நோக்கம்:- நம் பாரத தேசத்தில் ஒரு
கோடி மக்கள் தொகை உள்ள பீல் ஆதிவாசி மக்கள் மத்தியில் நம்
தலைமுறையில் சுவிசேஷம் அறிவித்து கிறிஸ்துவின் திருச்சபையைக்
கட்டுவதாகும்.
பீல் மக்கள் கலாச்சாரம்:- பீல் என்ற
வார்த்தை திராவிட மொழியிலிருந்து மருவி “வில்“ என்னும் பொருள்
கொண்டது. ஒவ்வொரு குடும்பத்தினரும் வில், அம்பு, வாள்
பயன்படுத்துவார்கள். இவைகளைக் கொண்டு வேட்டையாட அல்ல, திருடவும்,
கொள்ளையிடவும், சண்டையிடவும், தங்களைப் பாதுகாக்கவும்
பயன்படுத்துகிறார்கள்.
பீல் ஆதிவாசி மக்கள் சிறு கிராமங்களிலும், மலைப்பாங்கான
குன்றுகளிலும், சிறிய குடிசைகள் அமைத்து அதைச் சுற்றிலும் உள்ள
தங்கள் நிலத்தில் மக்காச்சோளத்தைப் பயிரிடுகின்றனர். இவர்கள்
மக்காச்சோள ரொட்டிகளை எண்ணெயும், உப்பும் இல்லாமல் சுட்டு, காரமான
இஞ்சி, மிளகாய், பூண்டுகளைச் சேர்த்து உண்பார்கள். சாராயத்தை
வீட்டில் தயாரித்து சிறுவர்கள், பெண்கள் முதலாக அனைவரும்
பருகுவார்கள்.
பீல் மக்கள் மழையை நம்பி வாழ்கிறவர்கள். மழை
பெய்யாவி்ட்டால் விவசாயம் செய்ய முடியாமல் பிழைப்பிற்காக கூலி வேலை
செய்ய பெரிய நகரங்களுக்குச் சென்றுவிடுவார்கள். பெரும்பாலான
கிராமங்களில் போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், மருத்துவம்,
பாடசாலை போன்ற அடிப்படை வசதிகள் கூட கிடையாது. பிலோடி என்னும்
எழுத்து வடிவில்லா மொழி பேசுகிறார்கள். இறந்த ஆவிகளையும்
குலதேவதைகளையும் வழிபட்டு வருகிறார்கள். எல்லா வீடுகளிலும்
பில்லிசூனியக் கட்டுகளும், பிசாசின் பிடிகளும் உண்டு.
மந்திரவாதியை தெய்வமாகவும், குருவாகவும் நம்பி வாழ்கிறார்கள்.
வணிகர்களாலும், மந்திரவாதிகளாலும், வட்டிக் கடைக்காரர்களாலும்
மிகவும் ஏமாற்றப்படுகிறார்கள். இவர்கள் இந்தத் தலைமுறையில் இயேசு
கிறிஸ்துவின் அன்பினை ஒருமுறை கூட கேள்விப்படாதவர்கள்.
பணியின் ஆரம்பகாலம்:- புறஜாதிகள்
மத்தியில் மிஷனெரி பணிபுரிய அழைப்புப் பெற்ற
சகோதரர் V.தேவதாஸ் மற்றும் அவரது மனைவி
சகோதரி.வஹிதா தேவதாஸ் இவர்கள் இருவரும் திருமணமான பின்பு “எங்கள்
வாழ்வில் ஒரு ஜாதி மக்களைத் தாரும்” என்று வாஞ்சித்து ஜெபித்தபோது
தேவன் பீல் ஆதிவாசி மக்கள் மத்தியில் அழைத்துச் சென்று தரிசனம்
கொடுத்தார். தேவ நடத்துதலின்படி 28.12.1990 அன்று அன்பு சகோதரர்
மோகன் சி. லாசரஸ் (இயேசு விடுவிக்கிறார், நாலுமாவடி) அவர்கள்
திறப்பின் வாசல் ஜெபத்தில் சகோதரர் V. தேவதாஸ் குடும்பத்தை
பிரதிஷ்டை செய்தார்கள். 17.07.1991 முதல் பணித்தளத்தில் ஊழியங்கள்
ஆரம்பிக்கப்பட்டது.
அமைவிடம்:- குஜராத் மாநிலத்தில் தாகோத்
மாவட்டம், இராஜஸ்தான் மாநிலத்தில் பான்ஸ்வாடா மாவட்டம்,
மத்தியபிரதேசம் மாநிலத்தில் ஜாபுவா மாவட்டம் ஆகிய மாவட்டங்களில்
மட்டும் சுமார் 45 இலட்சத்திற்கும் அதிகமான பீல் ஆதிவாசி மக்கள்
வாழ்கின்றனர். நமது ஊழியம் குஜராத் மாநிலத்திலுள்ள தாகோத்
மாவட்டத்திலுள்ள தாகோத் என்ற ஊரை மையமாக வைத்து நடைபெறுகிறது.
வளரும் இன்றைய பணி:- தேவனுடைய
கிருபையினாலும் அநேகருடைய ஜெபத்தினாலும் ஆரம்ப நாட்களில் மிஷனெரி
இல்லத்தில் வாரந்தோறும் நடைபெற்ற உபவாச ஜெபத்தில் தேவன் அநேக
அற்புதங்களை நடத்தினார். குருடர்கள் பார்வையடைந்தார்கள்.
சப்பாணிகள் நடந்தார்கள். பிசாசின் பிடியிலிருந்து
நூற்றுக்கணக்கானோர் விடுவிக்கப்பட்டார்கள். மந்திரவாதிகள்,
திருடர்கள், குடிகாரர்கள் என பலர் இயேசுவை இரட்சகராக
ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து கிராமங்கள்தோறும் பின்தொடர் ஊழியங்கள்
ஆரம்பிக்கப்பட்டது.
பீல் சுதேச ஊழியர்கள்:- ஒரு கோடி பீல்
மக்களும் தங்கள் சொந்த மக்களாலே சந்திக்கப்பட வேண்டும் என்பதே
ஆண்டவர் நமக்குக் கொடுத்த தரிசனமும் பாரமும் ஆகும். இந்த
தரிசனத்தை நிறைவேற்ற இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் பெற்று சொந்த
ஜனங்கள் இரட்சிக்கப்பட தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த
நூற்றுக்கணக்கான ஊழியர்களைத் தேவன் தந்துள்ளார்.
இதுவரை 450 பீல் ஆதிவாசி குடும்பங்கள்
வேதாகமப் பயிற்சிக்குப்பின் முழு நேரமாய் ஊழியத்தில்
இணைந்துள்ளார்கள். இவர்களை தேவன் அற்புத அடையாளங்களுடன்
பயன்படுத்தி வருகிறார்.
கிராம ஆலயங்கள்:- இதுவரை சுமார் 1
இலட்சத்திற்கும் அதிகமான ஆத்துமாக்கள் இயேசு கிறிஸ்துவை சொந்த
இரட்சகராக ஏற்றுக்கொண்டு திருச்சபையில் சேர்ந்துள்ளார்கள். இயேசு
கிறிஸ்துவை விசுவாசித்து திருமுழுக்குப் பெற்றவர்கள் வாரந்தோறும்
620 கிராமங்களில் கூடி ஆராதிக்கிறார்கள். இதுவரை 215 கிராம
ஆலயங்கள் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இன்னும் 100
கிராமங்களில் உடனடியாக ஆலயங்கள் கட்டப்பட வேண்டும்.
|