English Version
தேவன் தந்த திருச்சபை:
(26.01.2010 அன்று C.S.I. கால்டுவெல் நினைவு ஆலயத்தின் புதிய ஆலய பிரதிஷ்டை நாளில் நமது பேராயர் Rt.Rev.Dr.V. தேவதாஸ் அவர்கள் அளித்த தேவ செய்தியின் சுருக்கம்)
கிறிஸ்துவுக்குள் மிக அன்பானவர்களே, இந்த நாளில் தேவன் நமக்கு அவரை ஆராதிக்கும்படியாக தந்த மாபெரும் திருச்சபைக்காக தேவனைத் துதிப்போம். இந்த நாளிலும் திருச்சபையை குறித்த காரியங்களை எபேசியருக்கு பவுல் அடியார் எழுதின காரியங்களை வைத்து தியானிப்போம்.
1. ஆலயம் கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கும் சின்னம்
முதலாவது திருச்சபையை நாம் காணும்போதெல்லாம் கிறிஸ்து இயேசுவின் அன்பை நாம் நினைவுகூற வேண்டும். சபையானது இயேசு கிறிஸ்துவின் அன்பை பிதிபலிக்கும் சின்னமாக விளங்குகிறது. ஆகவேதான் எபேசியர் 5 : 25-27 வரை வாசிக்கும்போது அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து......தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
தேவன் நமக்கு திருச்சபையை தருவதற்காக தம்முடைய ஒரேபேரான குமாரனை தந்தருளி இவ்வளவாக அன்புகூர்ந்தார். பிதாவின் அன்பு சபையில் குமாரன் மூலமாக வெளிப்பட்டது. குமாரனாகிய இயேவின் அன்பு கல்வாரியின் மூலமாக சபைக்கு வெளிப்படுகிறது. பிரியமானவர்களே சபையானது எந்த மனிதனுக்கோ, ஸ்தாபனத்திற்கோ, சபைபிரிவுகளுக்கோ சொந்தமானது அல்ல. அது தேவனுக்கு சொந்தமானது. அப் 20 : 28-யை வாசித்து பாருங்கள். “தேவன் தம்முடைய சுய ரத்தத்தினாலே சம்பாதித்து கொண்ட தமது சபை” என்று ஆவியானவர் வெளிப்படுத்துகிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நம் தேசத்தில் ஷாஜகான் என்ற மன்னர் ஆட்சி புரிந்தது நமக்குத் தெரியும். அவர் தம் மனைவி மும்தாஜை மிக அதிகமாக நேசித்தார். ஆனால் விரைவில் கொடிய நோயினால் அவருடைய அன்பு மனைவி தாக்கப்பட. எவ்வளவு பணம் செலவழித்து மருத்துவ சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணப்படுக்கையில் விழுந்துவிட்டாள். உயிர் பிரியும் தருவாயில் மும்தாஜ் தன் அன்பு கணவர் ஷாஜகானிடம் தம் மரணத்திற்கு பின்பாக அவர் தம்மீது வைத்த அன்பை வெளிப்படுத்த, உலகம் அந்த அன்பை காண ஒரு நினைவு சின்னத்தை எழுப்ப வேண்டிக்கொண்டாள். ஷாஜகான் அரசனும் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டு தன் முழு பலத்துடன் அன்புச் சின்னமாக தாஜ்மஹாலைக் கட்டி எழுப்பினார். பல நூறு ஆண்டுகளாக இன்னும் உலகத்தின் பற்பல இடங்களிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான ஜனங்கள் அதைக் கண்டு ஷாஜகான் அரசன் தன் மனைவி மீது வைத்த அன்பு எவ்வளவு பெரியது என உலக அதிசயமாக கண்டு பூரிக்கிறார்கள். அன்பானவர்களே, இதைக்காட்டிலும் சொல்ல முடியாத, விவரிக்க முடியாத அன்பை தேவன் கிறிஸ்து மூலமாக வெளிப்படுத்தி சபையை நமக்குத் தந்துள்ளார். எனவே நாம் எப்பொழுதெல்லாம் ஆலயத்திற்கு உள்ளே வருகிறோமோ அப்பொழுதெல்லாம் இயேசு கிறிஸ்துவின் அன்பை நினைவு கூருவோம். ஆகவேதான் கிறிஸ்து இயேசு தான் மறுபடி திரும்பி வருமளவும் அப்பத்தையும், திராட்சைரசத்தையும் நீங்கள் புசித்து பானம்பண்ணும்போதெலாம் தமது மரணத்தை நினைவுகூருங்கள் என்று கூறினார். திருச்சபை தேவனுடைய அன்பையும், கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தும் அன்பின் சின்னமாகும்.
2. தேவ ஜனங்கள் பக்திவிருத்தி அடைவதற்காக தேவன் சபையை உருவாக்கினார்.
அடுத்தபடியாக எபேசியர் 4 : 12 -16 –வரை வாசித்து பாருங்கள். குறிப்பாக 11,12 வசனங்களை பாருங்கள். “நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவத்ற்காகவும்”.(எபெ 4 : 11,12)
பக்தி விருத்தி அடைவது என்று கூறும்போது பரிசுத்தமான தேவனுடன் கூடிய உறவை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துவுடன், கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலும் நாம் வளரவேண்டும். வேதத்தில் முதல் சபையை நாம் ஆதியாகமம் புத்தகத்தில் வாசிக்கிறோம். அதுதான் ஏதேன் தோட்டம். தான் சிருஷ்டித்த ஆதாம், ஏவாள் இரு விசுவாசிகளுடன் தேவனே வந்து உறவாடுகிறார். ஏதேன் தோட்டத்தில் தேவனின் உறவு சபையில் ஜனங்கள் பெறவேண்டும். சபையில் வரும்போதெல்லாம் ஜனங்களுடன் அவர் உறவாட விரும்புகிறார். பாடல்கள் பாடி ஆராதிக்கும்போது மகிமை தேவஜனங்களை மூடுகிறது. வேத வசனங்களை தியானிக்கும்போது ஆவிக்குரிய ஆகாரத்தை அவர் தந்து நம்மை போஷிக்கிறார். தேவாலயத்தில் வந்து ஜெபிக்கும்போது தேவன் ஜெபத்தைக் கேட்கிறார். நாம் ஏதோ ஞாயிற்றுக்கிழமை மட்டும் வந்து அமர்ந்து 2 மணி நேரத்தை செலவிட்டு போவதற்காக அல்ல. அவருடன் உறவாடி பக்திவிருத்தியில் வளருவதற்காக தான். தேவனுடன் பரலோகத்தில் நித்தியகாலமாக நேரத்தை செலவிட ஆயத்தமாக நினைக்கும். அன்பானவர்களே இந்த பூமியில் எவ்வளவு நேரத்தை அவருடன் செலவிட மனதாயிருக்கிறோம். சபையில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்ல. ஒவ்வொருநாளும் அவர் பாதபடியில் வந்து அவருடன் ஐக்கியம் கொள்வோம்.
மேலும் சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், பூரண வளர்ச்சி அடைவதற்காகவும் தேவன் ஐந்து வகையான ஊழியங்களையும் (எபே 4 : 12,13) ஆவிக்குரிய ஜீவியத்தில் ஒவ்வொரு விசுவாசியும் வளர பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தையும், ஆவியின் ஒன்பது வரங்களையும் தந்துள்ளார். (I கொரி 12 : 4-10) கொரிந்து சபையில் பிரிவுகள், விபச்சாரம், விக்கிரகங்களுக்கு படைத்தவைகளை உண்ணுதல், திருமண காரியங்கள், கர்த்தரைப் பற்றிய அறிவில்லாமை, உயிர்த்தெழுதலை பற்றி ஞாபகமில்லாமை இவைகள் மத்தியிலும் கொரிந்து சபை விசுவாசிகளை பார்த்து பவுல் சொல்லுகிறார். “அன்றியும் சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக் குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை”.(1 கொரி 12 : 1) ஆகவே சபை கூடிவருவோம், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவோம். தேவனுடன் உறவாடுவோம்.
3. சபையை தேவன் கட்டி எழுப்பி வருகிறார (எபே 2 : 19-22)
சபையைக் குறித்து ஆவிக்குரிய சத்தியத்தை ஆவியானவர் எபேசியர் நிருபத்தில் நமக்கு தந்துள்ளார். சபை ஒரு கட்டிடத்திற்கு உவமானமாக கூறப்படுகிறது. இயேசு கிறிஸ்துவே மூலைக்கல்லாகவும், அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் அஸ்திபாரங்களாகவும், நாம் அனைவரும் கூட்டிக் கட்டப்பட்டு வருவதை அழகாக விவரிக்கிறார். நாம் ஆராதிக்கும் இந்தக் கட்டிடம் சபை ஜனங்கள் ஆராதிக்க தேவன் தந்த ஸ்தலமாகும், ஆனால் உலகமெங்கும் தேவன் தன் திருச்சபையான கட்டிடத்தை (Invisible Church) திருச்சபைகள் மூலமாக ஆலயம் கட்டி எழுப்புகிறார். இது முடிவுற்ற பணியல்ல கிறிஸ்துவின் வருகை வரை நடைபெறும் கட்டப்படுகிற பணி.
தேவன் அஸ்திபாரங்களை வைத்த அப்போஸ்தலர்களை பாருங்கள். யோவான் அப்போஸ்தலர்களைத் தவிர கிட்டத்தட்ட அனைவருமே தங்களை இரத்தசாட்சிகளாக சபைக்காக தந்துள்ளார். ஆரம்ப நூற்றாண்டுகளில் மரித்த பரிசுத்தவான்கள் ஆயிரம் ஆயிரம். மட்டுமல்ல தேசங்கள் தோறும் தேவன் அனுப்பித்தந்த மிஷனெரிமார்களை நினைத்துப்பாருங்கள். அவர்கள் தேசத்திலும் குறிப்பாக தமிழ்நாட்டில் வந்து சபைக்கு அஸ்திபாரங்களாக தங்கள் ஜீவனையே ஊற்றின மிஷனெரிமார்கள் வில்லியம் கேரி, சீகன்பால்க், ராக்லண்டு, மர்காசியஸ், ரேனியஸ், ரிங்கள்தௌபே....என்ற நூற்றுக்கணக்கானோரை நினைக்கிறோம். அவர்கள் விட்டுச்சென்ற பணியை அதாவது சுவிசேஷ அறிவிப்பின் பணியை தொடர்ந்து செய்து, அஸ்திபாரமான அந்தப் பணியை நம் தேசத்தில் அறிவிக்கப்படாத இடங்களுக்கு அறிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு சபையும் சுவிசேஷ நற்பணியிலும், ஆத்தும ஆதாயப் பணியிலும் மிஷனெரிகளை தேசமெங்கும் அனுப்பும் பணியிலும் ஈடுபடவேண்டும். தேவனுடைய அநாதி தீர்மானத்தின்படி, அவர் தந்த தரிசனத்தின்படி தேவன் எங்கள் குடும்பத்தை அழைத்து 19 வருடங்களுக்கு முன்பு பீல் மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். சுவிசேஷத்தை அறிவித்து, சீஷர்களை உருவாக்கி, ஊழியர்களையும், 500-க்கும் அதிகமான சபைகளையும் பல்லாயிரக்கணக்கான விசுவாச குடும்பங்களையும் தேவன் தந்துள்ளார். சபை பாகுபாடின்றி இந்தப் பணிகளை தொடர்ந்து தாங்கிவருகிற சபைகளுக்காக தேவனைத் துதிக்கிறேன். தொடர்ந்து சபையாக மிஷனெரிகளை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை வரை ஜெபித்து, தாங்கி அவருடைய சபையைக் கட்டுவோம்.
4. ஆலயம் ஒரு ஜெபவீடு
எபேசியர் 3 : 20,21-ல் நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. சபை தேவனுடைய வீடு என்று வேதம் சொல்கிறது.. அதை ஏசாயா 56 : 7 மற்றும் லூக்கா 19 : 46-ல் நாம் வாசிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆராதித்து போவதற்கு அல்ல. அனுதினமும் சபை ஜெபவீடாக மாறவேண்டும். தேசத்திற்காக, சபைக்காக, மிஷனெரி பணிக்காக ஜெபிக்கும் ஸ்தலமாக மாறவேண்டும். மட்டுமல்ல சபையில் வந்து ஜெபிக்கும் தேவ ஜனங்களை தேவன் ஆசீர்வதிக்கிறார். அன்னாள் ஆலயத்தில் வந்து தன் இருதயத்தை ஊற்றியதால், தேவன் தீர்க்கதரிசியாகிய சாமுவேலை மகனாக தந்தார். புதிய ஏற்பாட்டில் 18 வருடங்கள் சாத்தானால் கட்டப்பட்ட கூனியான ஸ்திரியை ஆபிரகாமின் மகளாக இயேசு கண்டார். விடுதலைத் தந்தார். சபையில் வந்து நமக்காக நம் பிள்ளைகளுக்காக,தொழிலுக்காக, குடும்பத்திற்காக ஜெபிக்கும்போது தேவன் ஆசீர்வதிக்கிறார். நம் பெலவீனங்களை, துக்கங்களை நீக்கி நாம் நினைப்பதற்ககும், வேண்டிக்கொள்ளுவதற்கும் மிக அதிகமாக அற்புதங்களையும், ஆசீர்வாதங்களையும் நமக்குக் கட்டளையிடுவார். ஆலயத்தில் நாம் கூடும்போது இயேசு பிரசன்னமாகி ஆசீர்வதிக்கிறார். இயேசுவுக்கே சபையில் மகிமையுண்டாவதாக.
கடைசியாக வெளி 21 : 2-24 வரை வாசித்து பாருங்கள். சபையில் அன்புகூர்ந்த இயேசு மறுபடியும் வரப்போகிறார். இரண்டாம் வருகையில் என்ன நடக்கும்? மணவாட்டியான சபையை எடுத்துக்கொள்ள மணவாளனாகிய இயேசு வரப்போகிறார். கண்களால் காணும் தேவ ஆலயத்தை அல்ல. அவருடைய ஆலயமாயிருக்கிற இரட்சிக்கப்பட்ட நம்மை கூட்டிக்கொண்டு செல்வார். ஞானஸ்நான பட்டியல், திருமணப் பதிவேடு, மரணப் பதிவேடுகளில் நம் பெயர் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் வேதம் தெளிவாக சொல்லுகிறது. ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள். (வெளி 21 : 27) தேவன் தாமே நம்மை ஆயத்தப்படுத்துவாராக. நாமும் அவருடைய வருகையில் காணப்பட ஆயத்தமாவோம். நீங்களே தேவ ஆலயமாயிருக்கிறீர்கள். ஆமென். அல்லேலூயா.
Sharing Love Mission, Gujarat.
Back to Message Home
Top^
|