English Version
தேவன் என்னைத் தெரிந்தெடுத்து, பயன்படுத்தி
வருகிறார் என்றால், உண்மையிலேயே அது அவருடைய அநாதி தீர்மானமாகும்.
நான் 15.03.1963 அன்று தூத்துக்குடியைச் சேர்ந்த திரு. அருள்ராஜ் –
கிரேஸ் அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்தேன்.
நாசரேத்தைச் சேர்ந்த எனது பாட்டியம்மா (அம்மாவின் அம்மா)
மார்த்தாள் மோசஸ் அவர்கள் நான் பிறப்பதற்கு முன்பாக உன் பெயர்
எப்சிபா (கர்த்தர் உன்மேல் பிரியமாயிருப்பார்) என்றும், இவள்
ஊழியம் செய்வாள் என்றும் தேவன் வெளிப்படுத்தினதாக எனது தாயரிடமும்,
என்னிடமும் கூறுவார்கள். மட்டுமல்லாமல், நான் நாசரேத் ஊருக்குச்
செல்லும்பொழுதெல்லாம் மர்காஷியஸ், ராக்லெண்ட் மிஷனெரிகளின்
வாழ்க்கை சரித்திரங்களைச் சொல்லி மிஷனெரி தாகத்தை
ஏற்படுத்தினார்கள். நான் எனது பெற்றோருக்கு மிகவும் பிரியமான
மகளாகவும், அதே நேரத்தில் கிறிஸ்தவ பக்தி, ஒழுங்குகளில் சரியாக
வழிநடத்தப்பட்டும் வளர்க்கப்பட்டேன். இளம் பருவத்திலிருந்தே நான்
இயேசு கிறிஸ்துவை அதிகமாய் நேசிக்கின்ற இருதயத்தை கிருபையாய்
பெற்றிருந்தேன். மட்டுமல்லாமல் பாடல்களின் மூலம் தேவனைத்
துதிப்பதில் அதிக மகிழ்ச்சியடைவதுண்டு.
1976-ம் ஆண்டு நாகர்கோவிலில் கொட்டாரம் என்ற
இடத்தில் நடைபெற்ற வாலிபப் பெண்கள் முகாமில் பங்கெடுத்தேன்.
சந்தியா வேளையில் இயேசு கிறிஸ்துவின் முகத்தை தரிசிக்கும்
பாக்கியத்தைப் பெற்றேன். என்னையும் அறியாமல் தேம்பி அழுது
இரட்சிப்பைப் பெற்றேன். “கர்த்தர் என் வெளிச்சமும் என்
இரட்சிப்புமானவர், யாருக்கு பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின்
பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” சங் 27 : 1 இந்த வசனத்தின் மூலம்
தேவன் என்னோடு பேசி என்னை பெலப்படுத்தினார். அந்தநேரமே என்னை
ஊழியத்திற்கென்று அர்ப்பணித்தேன்.
அந்த வருடத்தில் ஆறுமுகநேரி C.S.I
திருச்சபையின் மூலம் V.B.S. Directors Training-க்கு
அனுப்பப்பட்டேன். பயிற்சியிலிருந்து வந்தபின் எனது பொறுப்பில்
கொடுக்கப்பட்ட 300 சிறு பிள்ளைகளைப் பார்த்தபொழுது என் உள்ளம்
ஆத்தும பாரத்தினால் நிறைந்தது. 10 நாட்களுக்குள் பிள்ளைகள்
அனைவரையும் இரட்சிப்புக்குள் வழிநடத்த வேண்டும் என்ற
வாஞ்சையுடனும், ஜெபத்துடனும் செயல்பட ஆரம்பித்தேன். தேவன் என்
வாஞ்சையையும். ஜெபத்தையும் கேட்டருளினார். பின்பு நான் அதிகமாய்
ஆத்தும பாரத்தினால் நிரப்பப்பட்டேன்.
உடனே ஊழியம் செய்ய வேண்டும் என்ற
வாஞ்சையிருந்த பொழுதிலும் பெற்றோரின் விருப்பப்டியே கல்லூரி
படிப்பிற்குச் சென்றேன். ஆனாலும் விடுமுறை நாட்களில் YFC (Youth
for Christ)-ல் Youth Camp-களில் Volunteer-ஆகச் சென்று உதவி
ஊழியம் செய்வேன். ஆனாலும் எனது சரீரத்தில் அடிக்கடி இழுப்பு
வியாதியினால் அதிகம் கஷ்டப்படுவேன். திடீரென்று ஒரு நாள் வியாதி
அதிகரிக்கவே, மிகவும் பெலவீனப்பட்டு தினமும் இரண்டு ஊசிகள்
போடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்த நாட்களில் எனது தாயாரும்
எனக்கு வியாதியிலிருந்து விடுதலை கிடைத்தால் ஊழியத்திற்கு
அனுப்புவேன் என்று பொருத்தனையோடு ஜெபித்தார்கள். இரண்டு நாட்கள்
மருத்துவமனைக்குச் சென்றேன். ஆனால் அன்று இரவு காயல்பட்டிணத்தில்
சகோ. மோகன் சி. லாசரஸ் அவர்கள் கூட்டம் நடைபெற்றது. மிகவும்
வேதனையோடு பங்குபெற்றேன். அன்று சகோதரர் ஜெபிக்கும்போது தேவன்
எனக்கு அற்புதமான சுகத்தைக் கொடுத்தார். அன்றோடு என்னுடைய சரீர
வியாதியிலிருந்து விடுதலைப் பெற்றேன். எனக்கு ஜீவன், சுகம், பெலன்
தந்த தேவனுக்காக வாழ என்னை அர்ப்பணம் செய்தேன்.
தீடிரென்று எனது தகப்பனார்
வியாதிப்படுக்கையில் விழுந்தபடியால் ஏற்பட்ட பொருளாதார
நெருக்கடியின் காரணமாக நான் வேலைப்பார்த்தால்தான் குடும்பத்தை
நடத்த முடியும் என்ற சூழ்நிலை நேரிட்டது. நான் Telephone,
Wireless Operator Course முடித்திருந்தபடியால் அந்த வேலை
கிடைக்கும்படியாய் எனது தாயார் அதிக முயற்சி எடுத்தார்கள்.
இதற்கிடையில் மிஷனெரியாக ஒரிஸா செல்லும்படியான ஆலோசனை சபை போதகரான
Rev. காந்தி செல்வின் அவர்கள் மூலம் கிடைத்தது. உடனே ஆதிவாசி
மக்கள் மத்தியில் ஊழியம் செய்ய என்னை அர்ப்பணித்தேன். எனது
பெற்றோரும் கண்ணீரோடு என்னை அர்ப்பணித்தார்கள். நான் இந்திய
மிஷனெரி சங்கத்தில் (IMS) சேர்ந்து பயிற்சிக்குச் சென்ற மூன்றாவது
நாளில் எனக்கு Telephone Operator வேலைக்கான Order கிடைத்தது.
ஒரு பக்கம் ஊழியம், மறு பக்கம் உலக வேலை, எதைத் தெரிந்தெடுப்பது?
உலகத்திலேயே மிகவும் உன்னதமான பணியாகிய ஊழியத்தையே செய்வதாக
முடிவெடுத்து, உலக வேலைக்கான Order-யை அந்த இடத்திலேயே கிழித்து
எறிந்துவிட்டு என்னை ஊழியத்திற்கென்று முழுமையாக அர்ப்பணித்தேன்.
1983-ல் IMS மூலம் ஒரிஸா மாநிலத்தில்
மல்க்கன்கிரி என்ற பணித்தளத்தில் மிஷனெரியாக சென்று 2 ஆண்டுகள்
பணிபுரிந்தேன். கோயா மற்றும் சந்தாலி இனமக்கள் மத்தியில் கிராம
ஊழித்திற்கு வாரந்தோறும் சைக்கிளில் சென்று ஊழியம் செய்ய கிருபை
செய்தார். மட்டுமல்லாமல் மல்க்கன்கிரி பணித்தளத்தில் உள்ள ஆதிவாசி
சிறுவர்கள் விடுதி மற்றும் ஆங்கிலப் பள்ளியில் பணிபுரியும்
பாக்கியத்தைக் கொடுத்தார். ஆதிவாசி சிறுவர்களுக்கு இயேசுவைப்
பற்றி போதிக்கும் கிருபையை பெற்றிருந்தேன். மட்டுமல்லாமல்
பணித்தளத்தில் தலைமை போதகராக இருந்த Rev. பால் ஜெயராஜ்
அவர்களுக்குக் கீழ்ப்படிந்து மற்ற அங்குள்ள ஒழுங்கு முறைகள்,
கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு
உற்சாகமாய் ஊழியம் செய்தேன். நான் எதிர்காலத்திலும் தேவனுக்காக
ஊழியம் செய்து கர்த்தருக்கு மகிமையாய் வாழவேண்டும் என்று
பாரத்துடன் ஜெபித்து வந்தேன். என் ஜெபத்தை கர்த்தர் கேட்டார்.
1985-ம் ஆண்டு ஜுலை 8-ம் தேதி பீஹாரில்
மிஷனெரியாக பணியாற்றிக் கொண்டிருந்த சகோ. தேவதாஸ் அவர்களோடு
திருமணம் நடந்தது. ஆதிவாசிகள் மத்தியில் ஊழியம் செய்ய
அர்ப்பணித்திருந்த எங்கள் இருவரையும் தேவன் இணைத்தது நிச்சயமாகவே
தேவனுடைய அநாதி திட்டமாகும். அழைத்தவர் உண்மையுள்ளவர். அவர்
அப்படியே செய்வார் என்ற வாக்கின்படியே எங்களை அழைத்தவர் கடந்த 23
வருடங்கள் எங்கள் வாழ்க்கையிலும், பீல் மக்கள் ஊழியப்பாதையிலும்
உண்மையுள்ளவராயிருக்கிறார். தேவன் எங்களுக்கு டைட்டஸ், ஷாலோம்,
ஷெக்கினா மூன்று பிள்ளைகளைத் தந்து ஆசீர்வதித்துள்ளார். தேவனுக்கே
மகிமையுண்டாவதாக!
Top^
|