English Version
நீங்கள் என்
ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்
“நீங்கள் என்
ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்” எரேமியா 30 : 22
சிறப்பு செய்தி:
Rt. Rev. Dr. V. தேவதாஸ்
கிறிஸ்துவுக்குள் மிக அன்பான ஷாலோம் ஜெப
பங்காளர்கள் மற்றும் இந்த மலரை வாசிக்கும் உங்கள் யாவருக்கும்
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் அன்பு புத்தாண்டு
வாழ்த்துக்கள்.
புதிய ஆண்டில் பிரவேசிக்க தேவன் தந்த
கிருபைக்காக தேவனை துதிப்போம். இந்த புதிய ஆண்டில் தேவன்தாமே தம்
ஜனங்களாகிய நம்மை அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக! இந்த புதிய வருட
ஆசீர்வாதத்திற்காக ஜெபித்தபோது தேவன் மிக ஆசீர்வாதமான
வாக்குத்தத்தத்தை தந்தார். நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். நான்
உங்கள் தேவனாயிருப்பேன் என்பதுதான் அந்த வாக்குத்தத்தம். எரேமியா
தீர்க்கதரிசன புத்தகத்தில் 30, 31-ம் அதிகாரங்களை தியானிக்கும்போது
தேவன் நம்மை அவருடைய ஜனங்களாக ஏற்றுக்கொள்ளும்போது என்னென்ன
ஆசீர்வாதங்களை கட்டளையிடுகிறார் என்பதை தியானிப்போம்.
உன் கட்டுகளை அறுப்பேன்
தேவன் நம்முடைய ஜனங்களாய் நம்மை
ஏற்றுக்கொள்வது எவ்வளவு பெரிதான ஆசீர்வாதமாக உள்ளது. முதலாவது
தேவன் தம் ஜனங்கள் மீதுள்ள கட்டுகளை அறுக்கிறார். எரேமியா 30 :
8-ஐ வாசித்துப்பாருங்கள். “அந்நாளில் நான் உன் நுகத்தை உன்
கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன்” என்று
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அந்நியர் இனி அவனை அடிமை
கொள்வதில்லை. தேவன் தம்முடைய ஜனங்களாய் மாற்றவேண்டுமானால்
முதலாவது அவர் தம் ஜனங்களின் மீதுள்ள கட்டுகளை அறுக்கிறார்.
இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு கானான் தேசத்தை கொடுக்கிறார்.
வல்லமையுள்ள தேவன் இறங்கி வந்து ஓரேப் பர்வதத்தில் மோசேயை
சந்தித்தபோது மோசேயிடம் முதலாவது நான் எகிப்து தேசத்தின்
அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொள்வேன் என்று வாக்குரைத்தார்.
அதன்படி பஸ்கா ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட்ட அந்த இரவில்
மாபெரும் இரட்சிப்பை கட்டளையிட்டார். புதிய ஏற்பாட்டில் தேவன்
நம்மை பாவங்கள், சாபங்கள் ஆகிய கட்டுகளிலிருந்து விடுவிக்க
தம்முடைய ஒரே பேரான குமாரன் இயேசு கிறிஸ்துவை பழுதற்ற
ஆட்டுக்குட்டியாக நமக்காக தந்தார்.
அதன் மூலமாக நாமெல்லாரையும் தம்முடைய சொந்த
ஜனமாக ஏற்றுக்கொண்டார். அவருடைய நாமத்தின்மேல்
விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ,
அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு
அதிகாரங்கொடுத்தார். (யோவா 1 : 12) நாம் முதலாவது நம்முடைய
பாவங்களை அறிக்கையிட்டு, சொந்த இரட்சகராக இயேசுவை
ஏற்றுக்கொள்ளும்போதுதான் நாம் அவர் ஜனங்களாக மாறுகிறோம். கிறிஸ்தவ
குடும்பத்தில் பிறப்பதால், ஒழுங்காக ஆலயத்திற்கு போவதினால் மடடும்
அல்ல இயேசுவை நாம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது அவர்
நம்மீது உள்ள பாவத்தின் கட்டுகளை சாபத்தின் கட்டுகளை அறுத்து இனி
நம்மை ஒருவரும் அடிமை என்று கூறாதபடி நம்மை தம் சொந்த ஜனமாக
ஏற்றுக்கொள்கிறார். பீல் ஆதிவாசி மக்கள் வில் அம்புகளை
வைத்துக்கொண்டு திருடிக்கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள்.
சாராயத்தை காய்ச்சி குடித்துக்கொண்டிருந்தார்கள். இயேசுவை
அறிந்துகொண்ட பின்பு பாவங்களை அறிக்கை செய்து சாராயம், பீடி போன்ற
லாகிரி வஸ்துகளை விட்டு விட்டு இயேசுவை ரட்சகராக ஏற்றுக்கொள்ள
முன்வந்தபோது தேவன் அவர்கள் மீதுள்ள கட்டுகளை அறுத்தார். நீங்கள்
என் ஜனங்களாயிருப்பீர்கள் என வாக்குபண்ணி பல்லாயிரம் குடும்பங்களை
தம் பக்கமாய் ஏற்றுக்கொண்டு நான் அவர்களுக்கு தேவனாக இருப்பேன்
என்று வாக்குரைத்தார். ஆம் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் கட்டுகள் அறுக்கப்பட்டு அவர் ஜனங்களாய்
இருப்பது எத்தனை மகிழ்ச்சி.
ஆரோக்கியம் தந்து காயங்களை ஆற்றுகிறார்
எரேமியா 30 : 17-ஐ வாசித்து பாருங்கள்.
அவர்கள் உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத்
தள்ளுண்டவன் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம்
வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
தம் ஜனங்களாக தேவன் நம்மை நேசிக்கும்போது தேவன் தரும்
ஆசீர்வாதங்களில் ஒன்று ஆரோக்கியம் தந்து காயங்களை ஆற்றுவது.
இஸ்ரவேல் ஜனங்களை தேவன் மீட்டுக்கொண்டபின்பு மாரா என்ற இடத்திற்கு
வந்தபோது கசப்பான தண்ணீர் கிடைத்ததின் நிமித்தம்
முறுமுறுத்தார்கள். தேவன் அதை மதுரமாக மாற்றினார். தேவ
ஜனங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை தந்தார். நானே உன் பரியாரியான
கர்த்தர் என்றார். (யாத் 15 : 26) நான் எகிப்தியருக்கு
வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன் என்று தன்
ஜனங்களுக்கு தேவன் வாக்குபண்ணுகிறார். நம் பீல் விசுவாசிகளில்
அநேகர் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு எந்நாளும் சுகவீனம், நோய்
என்று மருத்துவர்களையும், மந்திரவாதிகளையும் அணுகி கோழி, ஆடு,
சாராயம் இவைகளுடன் தங்கள் பணத்தையும் ஏராளமாக செலவழித்தார்கள்.
இன்று கிறிஸ்துவின் பிள்ளைகளாக மாறியபின்பு என்ன ஆச்சரியம். கடந்த
ஞாயிறு ஒரு தேவலாயத்தில் பங்குபெற்றபோது ஒரு விசுவாசி ஆச்சரியமாய்
ஒரு நோய் வரவில்லை. மருந்துக்காக செலவழிக்கவில்லை என சந்தோஷமாக
அனுபவித்து கூறினார். வேதம் சொல்லுகிறது. தேவன் தாமே தம்
ஜனங்களின் மீது வைத்த அன்பினால் தம்முடைய ஒரே பேரான குமாரனை
சிலுவையில் பலியாக தந்து அன்பு கூர்ந்தார்.
ஏசாயா 53 : 4,5 சொல்லுகிறது. “மெய்யாகவே அவர்
நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களை சுமந்தார்.
நாமோ அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று
எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு,
நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச்
சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது். அவருடைய
தழும்புகளால் குணமாகிறோம்”. தேவன் நம்மை தம் ஜனங்களாக
மாற்றும்போது அவர் நமக்கு தெய்வீக சுகத்தை கட்டளையிடுகிறார்.
ஆனால் அவர் ஜனங்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன? யாத் 15 :
26-ல் வாசித்து பாருங்கள் “நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை
கவனமாக கேட்டு அவர் பார்வைக்கு செம்மையானவைகளை செய்து அவர்
கட்டளைகளுக்கு செவிகொடுத்து அவருடைய நியமங்கள் யாவையும் கைகொள்ள
வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்”. நாமும் அவருடைய சொந்த
ஜனங்களாய், அவர் நம் தேவனாக இருப்பதால் அவருக்கு கீழ்படிவோம்.
“வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்” யாத் 23 : 25 வாக்கை
சுதந்தரித்துக்கொள்வோம்.
எல்லா ஆத்துமாக்களை நிரப்புகிறார்.
எரேமியா 31 : 25-யை வாசித்து பாருங்கள். நான்
விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா
ஆத்துமாவையும் நிரப்புவேன். தேவன் தம்முடைய ஜனங்களுக்கு அருளும்
மாபெரும் ஆசீர்வாதம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள். தம் ஜனங்களை பாவ
சாபங்களிலிருந்து மீட்டு, நோய்களை குணமாக்கி, காயங்களை ஆற்றுவது
மட்டுமல்லாமல் ஆவிக்குரிய நன்மைகளால் நிரப்புகிறார். அவர்
அப்படியே விட்டுவிடாமல் நான் என் நியாயப்பிரமானத்தை......என்று
கர்த்தர் சொல்லுகிறார். “அவர்கள் தங்களுக்கும், தங்கள்
பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல
நாட்களிலும் எனக்கு பயப்படும்படிக்கும் நான் அவர்களுக்கு ஒரே
இருதயத்தையும், ஒரே வழியையும் கட்டளையிட்டு” தேவன் தம்
ஜனங்களுக்கு புதிய இருதயத்தை தந்து வேதத்தை தந்து அனுதினமும்
ஆத்துமாவை போஷிக்கிறார். மட்டுமன்றி தம்முடைய பரிசுத்த ஆவியால்
நம்மையும், நம் பிள்ளைகளையும் நிரப்புகிறார்.
நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை
ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும்
தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர்கள்
சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
யோவேல் 2 : 28 கடைசி நாட்களில் தேவஜனங்களுக்காக தேவன்
வைத்திருக்கும் உன்னதமான ஆசீர்வாதங்கள் பரிசுத்த ஆவியானவரின்
அபிஷேகமும், ஆவிக்குரிய வரங்கள் மற்றும் தேவனோடு உறவாடும் உன்னதமான
அனுபவங்களை நாம் பெற்றுக்கொள்ள விரும்புகிறார். ஏனெனில் நாம்
அவருடைய ஜனங்களாயிருக்கிறோம். அவர் நம்முடைய தேவனாக இருக்கிறார்.
இப்புதிய வருடத்தில் நாம் வாஞ்சையுடன் ஆவிக்குரிய அனுபவங்களுக்காக
ஜெபிப்போம். தேவன் நமக்கு கொடுக்கும் உன்னதமான ஆசீர்வாதங்களை
பெற்றுக்கொள்வோம். சபைகளில் பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி
ஊற்றப்படுவதாக. பரிசுத்த ஆவியானவரின் உன்னத பெலனுடன் சாட்சிகளாய்
ஜீவிக்க ஆத்தும ஆதாயம் செய்து அவர் வருகைக்கு ஆயத்தமாவோம்.
தம் ஜனங்களுக்கு தேவன் அளிக்கும் நன்மைகள்.
தேவன் தம்முடைய ஜனங்களை ஆவிக்குரிய
ஆசீர்வாதங்களால் மட்டுமல்லாமல் இவ்வுலகத்தின் சகல
ஆசீர்வாதங்களினாலும் நிரப்புகிறார். என் ஜனங்கள் நான் அளிக்கும்
நன்மையினால் திருப்தியாவார்கள். (எரே 31 : 14) அவர்களைக் குறித்து
சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் (எரே 32 : 42)
நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற
பூமியின் எல்லா ஜாதிகளுக்குமுன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள
கீர்த்தியாயும், புகழ்ச்சியாயும், மகிமையாயும் இருக்கும். நான்
அவர்களுக்கு அருளிசெய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லா
சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள். (எரே 33 :
9)
நிச்சயமாகவே தேவன் தம்முடைய நாமம்
தரிக்கப்பட்ட ஜனங்களுக்கு அருளிச்செய்யும் நன்மைகளைக் கண்ட தேவ
ஜனங்கள் மட்டுமல்ல புறஜாதிகளும் கண்டு தேவனை
மகிமைப்படுத்துவார்கள். எனக்கன்பானவர்களே “நீங்கள் என்
ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்”. (எரே 30 : 22)
என்ற வாக்குத்தத்தத்தை பிடித்து குடும்பமாக ஜெபியுங்கள். நமக்கு
தேவையான பொருளாதார நன்மைகள், நம் தேவையான வீடு, வாகனங்கள்,
பிள்ளைகளின் படிப்பு, மேற்படி, திருமண காரியங்கள், குழந்தை
பாக்கியம், ஊழியப்பாதையில் ஆத்துமாக்கள், ஊழியத்தில் வளர்ச்சி,
மட்டுமல்லாமல் நாம் கையிட்டு செய்யும் தொழில், நமக்கு தேவன் தந்த
வேலைகளில் உயர்வை கட்டளையிட்டு நம்மை சகல நன்மைகளினால்
நிரப்புவார்.
தேசத்தில் தேவஜனங்கள் உயர்த்தப்பட்டு
ஆசீர்வாதமாக அமைவார்கள். ஆவியானவர் பீல் விசுவாசிகளை இப்படியாக
ஆசீர்வதித்து உயர்த்துவேன் என்று வாக்குபண்ணியுள்ளார். இதை
வாசிக்கும் என் அன்பு சகோதர சகோதரிகளே, தேவன் இப்படிப்பட்ட
நன்மைகளால் தம் ஜனங்களை நிரப்ப ஆயத்தமாக இருக்கிறார். நாம் அவரை
தேவனாக ஏற்று அவர் ஜனங்களாய் வாழ, ஒப்புக்கொடுப்போம்.
Top^
|